ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள 4ஆவது சோதனை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மொபைல் லாஞ்சர் கருவி மூலம் அக்னி-4 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.
 
அணு ஆயுதத்துடன் 4,000 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, அந்த ஏவுகணை திட்டமிட்டபடி பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
 
இந்த சோதனையை ரேடார் சாதனங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிகல்ஸ் கருவிகள் மூலமும், ஒடிஸா கடற்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 2 கப்பல்கள் மூலமும் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் கண்காணித்தனர்.
 
அக்னி-4 ஏவுகணையானது, தரையில் இருந்து பறந்து சென்று, தரையில் மற்றோர் இடத்தில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. அக்னி-4 ஏவுகணை சோதனை நடத்தப்படுவது, இது 7ஆவது முறையாகும்.