நாட்டையே உலுக்கும் ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
 
இந்த நிலையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய புத்தக நிறுவனமான பாரதி புத்தகாலயம், நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் ரஃபேல் விமானங்களை வாங்குவதில் நடந்த முறைகேடு குறித்து ஒரு நூலை வெளியிடுவதாக இருந்தது. இதனை எஸ். விஜயன் என்பவர் எழுதியிருந்தார்.
 
இந்த புத்தகத்தின் வெளியீடு சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் நடப்பதாக இருந்தது. இந்து குழுமத்தின் தலைவர் என். ராம் வெளியிடுவதாக இருந்தது.
 
அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோரும் இவ்விழாவில் உரையாற்றவிருந்தனர்.
 
 
இந்த நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் பாரதி புத்தகாலயத்திற்கு காவல் துறையினருடன் வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசனும் இ 3 காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷும் இந்த புத்தக வெளியீடு விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தக்கூடாது என்று கூறி கடிதம் அளித்துவிட்டு, புத்தகத்தை பறிமுதல் செய்வதாகக் கூறினர்.
 
“புத்தகத்தில் 146 பிரதிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அதனால் வெளியீட்டு விழாவை ரத்து செய்திருக்கிறோம்” என மீடியாவிடன் பேசிய பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன் வருத்தமுடன் தெரிவித்தார்.
 
இதனை தொடருந்து சமூக வளைதளத்திலே தேர்தல் ஆணையத்தை கண்டித்து பலரும் பதிவிட பரபரப்பு ஏற்பட்டது
 
ஆனால் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது; ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரஃபேல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிசாமியிடம் கேட்டபோது, “இது தொடர்பாக அறிக்கை கேட்டிருக்கிறேன்” என்று மட்டும் தெரிவித்தார்.
 
இதற்கிடையில் இந்தப் புத்தகங்களைத் திரும்பத் தர தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புத்தக வெளியீட்டு விழாவை மாலையில் நடத்த அந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
 
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.