இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்படுவதில், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஹர்பஜன்சிங்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆடவுள்ள இந்திய அணிகள் தனித்தனியே அறிவிக்கப்பட்டன. இதில், தற்போது மும்பை அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்டுவரும் சூர்யகுமார் யாதவிற்கு இடமளிக்கப்படவில்லை.

இவர், இதுவரை 77 முதல்தர 50 ஓவர் போட்டிகளில் விளையாடி 5326 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 14 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும். மேலும், 160 டி-20 போட்டிகளில் ஆடி மொத்தம் 3295 ரன்களை அடித்துள்ளார். இதில் 17 அரை சதங்கள் அடக்கம்.

இந்நிலையில், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு இடமளிக்கப்படாதது குறித்து ஹர்பஜன்சிங் கூறியுள்ளதாவது, “இந்திய அணிக்கு இப்போதைக்கு அவசியம் தேவைப்படும் ஒரு வீரர் சூர்யகுமார் யாதவ். அவர் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக்கோப்பை சீசன்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருபவர்.

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறையை பிசிசிஐ பின்பற்றுகிறது என நினைக்கிறேன். பிசிசிஐ தேர்வுக் குழுவினர் தயவுசெய்து சூர்யகுமார் யாதவின் சாதனைகளைப் பார்க்குமாறு வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான டெஸ்ட் அணியில், தற்போதைய ஐபிஎல் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் டி-20 இந்திய அணியில் தற்போதைய ஐபிஎல் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய டி-20 அணியில் இடமளிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், தான் கனவுபோல் உணர்ந்தாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி.

வடகிழக்குப் பருவமழை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு