கிரிக்கெட் ஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த தோனி, 2020 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சரியாக 74வது சுதந்திர தினத்தன்று இரவு 7.29 மணிக்கு தன் இன்ஸ்டாகிராமில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

தனது பதிவில் “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 19.29 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராக கருதவும்” என கூறியுள்ளார்.

தோனி 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2007இல் இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்ற அவர், இந்திய அணிக்கு 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை வென்று கொடுத்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதன்முறையாக தரவரிசையில் முதல் இடம் பெற்றதும் தோனியின் கேப்டன்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2014இல் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும், 2017இல் ஒருநாள் போட்டி கேப்டன்சியில் இருந்தும் விலகினார்.

2014இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த தோனி, தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என அப்போது வதந்திகள் வலம் வந்தன.

எனினும், தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி விலகி இருந்தார். அவரது ஓய்வு குறித்த வதந்திகள் தொடர்ந்து வலம் வந்தன.

இந்நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தோனி திடீரென ஆகஸ்ட் 15 அன்று இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவித்தார். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்ணீர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் வாசிக்க: அடுத்த ஆண்டில் குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்- மத்திய அரசு