ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிலிருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டு வந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் வெளியேறத் தொடங்கினர். அமெரிக்கா மட்டும் 1,24,000 பேரை மீட்டது. தலிபான்களின் கெடுபிடி நிறைந்த ஆட்சிக்குப் பயந்து இன்னமும் அங்கிருந்து மக்கள் வெளியேறக் காத்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டாலும், அவர்களுக்கு எதிராக வடக்கு கூட்டணி உள்ளிட்ட இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அங்கு இன்னும் பொருளாதாரம் மீளவில்லை. இதனால் அங்கு மக்கள் பணமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில், சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றில் இன்று (8.10.2021) வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாக தலிபான் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்தபோது மசூதியில் 300க்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. எனவே, இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக காபூல் விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.