பிலிப்பைன்ஸின் மங்குட் சூறாவளியால் இது வரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் என்ற தீவை மங்குட் என்ற சூறாவளி மணிக்கு 170 மைல் வேகத்தில் தாக்கியது. கனமழை, வெள்ளத்தால் பகியோ, சம்பெல்ஸ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் மூழ்கின. காட்டாறு போல் குடியிருப்புப் பகுதிகளில் பாய்ந்தோடும் வெள்ளத்தில் சிக்கி பலர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆங்காங்கே பெரியளவிலான மண் சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில் மங்குட் சூறாவளி காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரைக் காணவில்லை எனக் கூறப்படுவதால் இடிபாடுகளுக்குள் சிக்கியும், மரம் விழுந்ததிலும், உயிரிழந்திருக்கலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே சீனாவில் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்குக் கடலோரப் பகுதிகளை நோக்கி மங்குட் சூறாவளி பயணித்துக் கொண்டிருப்பதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Stranded commuters stand on a partially flooded road after Typhoon Mangkhut hit the main island of Luzon, in Carranglan, Nueva Ecija, Philippines, September 15, 2018. REUTERS/Erik De Castro

மங்குட் சூறாவளி தமது வேகத்தை குறைத்து இருப்பினும், பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் சாலையில் 8 அடிக்கும் மேல் வெள்ளம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் சூறாவளி ஓய்ந்த நிலையில் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. சராசரியாக ஆண்டுக்கு 20 சூறாவளியைச் சந்திக்கும் ஃபிலிப்பைன்ஸில் ஏராளமானோர் ஆண்டுதோறும் இயற்கைச் சீற்றங்களால் உயிரிழக்கின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட ஹையான் சூறாவளியால் 7350 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.