லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்ட கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா.. உ.பி.அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும், விவசாயிகள் மீது கார் ஏறிச் செல்லும் வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ராமு காஷ்யப்பை சுட்டுக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மீது கார் ஏறிய வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்ததில், துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக லவ் குஷ், ஆஷிஸ் பாண்டே என்ற இரண்டு பேரை மட்டுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (7-10-2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், லக்கிம்பூர் கெரி வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், முதல் தகவல் அறிக்கை எத்தனை பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தவர்கள் விவரம் ஆகியவை குறித்த அறிக்கையை உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (8.10.2021) தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்முறை தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொடூரமான கொலை வழக்கை இப்படித் தான் கையாள்வதா? உத்தரப் பிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும். மேலும் இந்த வழக்கில் எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறி, வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு நேற்று காவல்துறையினர் சம்மன் அனுப்பி, இன்று (8.10.2021) காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரினர். ஆனால், இதுவரை ஆஷிஸ் மிஸ்ரா விசாரணைக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா நேபாளம் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், “ஆஷிஸ் மிஸ்ராவை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து தனது இருப்பிடங்களை மாற்றி வருகிறார். ஆஷிஸ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.