அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது என்ற பாபா ராம்தேவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, தனது கருத்தை திரும்பப் பெறுவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆயுர்வேத மருத்துவ முறை இணைந்த கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார் ராம்தேவ். ஆனால் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், “நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால் தான் உயிரிழக்கிறார்கள்.
இந்த பெருந்தொற்று காலத்தில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டன. இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்” என ஆதாரமற்ற தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கள் மருத்துவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தக் கருத்துக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (IMA) கடும் கண்டனம் தெரிவித்து, பாபா ராம்தேவை தொற்று நோய் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும், பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி நிபந்தனையற்ற எழுத்துபூர்வ மன்னிப்புக் கேட்கவும் வலியுறுத்தியது.
இது தொடர்பாக, IMA வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்த பெருந்தொற்று காலத்திலும் மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது, அது பலரின் உயிரை பறித்துள்ளது என்று தனது விளம்பரத்திற்காக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மருத்துவர்கள் மீது பாபா ராம்தேவ் பழி சுமத்துவது வேதனையளிக்கிறது. இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.
அதுமட்டுமல்லாது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் இதனை உடனடியாக பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பாபா ராம்தேவ் கூறுவது போல் அலோபதி மருத்துவ முறையை முழுவதுமாக நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்துங்கள். இல்லையெனில், IMA சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தது.
பதஞ்சலியின் கொரோனில்: மத்திய சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்கும் IMA
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவுக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் கூறிய கருத்து அலோபதி மருத்துவத்தை மட்டும் கேள்விக்குள்ளாக்கவி்ல்லை, மருத்துவர்களின் திறமை, நோக்கம் ஆகியவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது முறையானது அல்ல.
மக்களால் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மனிதாரகிய நீங்கள் கூறும் கருத்து பெரிதும் மதிக்கப்படும். நாட்டில் நிலவும் சூழ்நிலை உணர்ந்து கருத்துக்களை நீங்கள் பேசியிருக்க வேண்டும். உங்களின் கருத்து மருத்துவர்களின் நம்பிக்கையை குலைத்து, கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிடும். எனவே, உங்களின் அவதூறான, துரதிர்ஷ்டமான கருத்துக்களை திரும்பப் பெறுவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பாபா ராம்தேவ் அளித்துள்ள பதிலில், “மதிப்பிற்குரிய சுகாதாரத்துறை அமைச்சரே, உங்கள் கடிதம் கிடைத்தது. நான் என்னுடைய முரண்பட்ட கருத்துக்களை திரும்பப் பெற்று, இந்த சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைக்கிறேன். என்னுடைய கருத்துக்களுக்காக நான் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா குறித்து உண்மை கருத்துக்களை தெரிவிப்பதற்காக சமூக செயற்பாட்டாளர்களையும், பொது மக்களையும் கைது செய்யும் பாஜக மோடி அரசாங்கம் பாபா ராம்தேவ் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கடினமான காலத்தில் இதுபோன்ற பொய் பரப்புரைகள் செய்து மக்களின் நம்பிக்கையில் விளையாடுவது முற்றிலும் தவறானது. ஆனால் பாபா ராம்தேவ் மத்திய பாஜக மோடி அரசாங்கத்தினருக்கு நெருக்கமாக உள்ளதால், இது போன்ற தேவையற்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு அதிலிருந்து தப்பித்து விடுகிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்
குறிப்பாக கொரோனாவின் முதல் அலையின் போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் அமைச்சர் நிதின் கட்கரி இணைந்து அறிமுகப்படுத்திய பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலியின் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தான கொரோனியல் கிட், அறிவியல் ஆதாரமற்றது என தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..