பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவிற்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களை மிகவும் தரம் தாழ்த்தி Presstitute – ஊடக வேசிகள் அவதூறு வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

இதற்கு முன்பும் இதேபோன்று பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு வார்த்தைகள் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுபோன்ற எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பத்திரிகையாளர்களை அநாகரிமாகப் பேசிவரும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அநாகரிக வார்த்தைகளால் வாய்ப்பூட்டு போட முடியாது எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தொடர்ந்து அநாகரிக சொற்களை எச்.ராஜா பயன்படுத்துவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆகவே ஊடகங்கள் எச்.ராஜாவை புறக்கணிக்க வேண்டும்.

இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் பாஜகவின் ஜனநாயக விரோத போக்கை எதிர்க்கும் வகையில் பத்திரிகையாளர்களை மேலும் ஒன்று திரட்டும் என்பதை அக்கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் எனச் எச்சரித்துள்ளது.

அதுபோல் எச்.ராஜா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சமீபகாலங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு எளிய இலக்காகப் பத்திரிகையாளர்கள் ஆளாகி வரும் கொடுமையான போக்கு அதிகரித்து வருகிறது.

இது மிக ஆபத்தானது மட்டுமல்ல, கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் எச்.ராஜா.

செய்தியாளர்கள் சந்திப்பில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். ஆனால், நிதானம் தவறி , Presstitute – ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து ஏசியுள்ளார். எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும், செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு, நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எச்.ராஜா அவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் எச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் எச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக, தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “ஜனநாயகத்தை தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றைக் கண்டித்துச் சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.