உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்து இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலியாகி இருப்பதாகவும், உலகில் உள்ள தடுப்பூசிகளில் 75% மருந்துகளை 10 நாடுகள் மட்டுமே கொள்முதல் செய்து தம்வசப்படுத்தியுள்ளன எனவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று, உலககின் அனைத்து நாடுகளிலும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை என பரவித் தொடர்ந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு, பகல் பாராமல் சுகாதார பணியாளர்கள் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

[su_image_carousel source=”media: 23518,23517″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் வீரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1.15 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் இல்லாததால் பல நாடுகளில் சுகாதார பணியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் தொற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. உலகமே சுமார் 18 மாதங்களாக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அடுத்த மூன்று வாரங்களுக்குள் கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையைக் கடந்துவிடுமோ என அஞ்சுகிறோம்.

ஒருசில வளர்ந்த நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு இணையாகத் தடுப்பூசி பணிகள் வேகமாக நடைபெறவில்லை. உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளில் 75 விழுக்காடு தடுப்பூசி மருந்துகளை 10 நாடுகள் மட்டுமே கொள்முதல் செய்து தம்வசப்படுத்தியுள்ளன.

எனவே வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்தை கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்க முடியாது: மாடர்னா & பைசர்