சூரத் அருகே அமைச்சர் மகனின் காரை தடுத்து, “அமைச்சர் மகன்னா, உனக்கு கொரோனா வராதா.. லாக்டவுனில் இப்படி தேவையில்லாமல் வெளியே ஊர் சுற்றுவது குற்றம்னு தெரியாதா.. இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்..” என்று கேள்வி கேட்ட கான்ஸ்டேபிள் சுனிதா யாதவ் ராஜினாமா கடிதம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த புதன் கிழமை இரவு 10 மணி அளவில் ஊரடங்கை மீறி வந்த காரை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டேபிள் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது, காரில் குஜராத் பாஜக அமைச்சர் கிஷோர் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் கான்ஸ்டேபிள் சுனிதா விசாரணை மேற்கொண்டதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், நான் யார் தெரியுமா.. அமைச்சர் மகன் என்று கூற, அதற்கு சுனிதா, நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. அமைச்சர் மகன்னா, உனக்கு கொரோனா வராதா.. லாக்டவுனில் இப்படி தேவையில்லாமல் வெளியே ஊர் சுற்றுவது குற்றம்னு தெரியாதா.. என்று கேட்டுள்ளார்.
இதனால் மேலும் கோபம் கொண்ட பிரகாஷ், தொடர்ந்து சுனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘உன்னை 365 நாளும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என மிரட்டியுள்ளார். ஆனால் கான்ஸ்டேபிள் சுனிதாவோ, நான் உன் வீட்டு வேலைக்காரி இல்லை, உனக்கு அடிமையும் இல்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்.. இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.. 12 மணி வரை டியூட்டிக்கு நிற்கும் நாங்கள் என்ன முட்டாளுங்களா? உங்கள் இஷ்டத்துக்கு ஊரை சுற்றுகிறீர்களே.. என்று கேட்டுள்ளார்.
மேலும் அமைச்சர் மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்துக்கு உடனே தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அமைச்சர் மகனையும், அவரது நண்பர்களையும் உடனே விடுவிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானாதையடுத்து, சுனிதா யாதவின் செயலை பாராட்டியும், அமைச்சர் மகனை கண்டிடும் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இச்சம்பவத்துக்கு பிறகு சுனிதா தலைமை காவல் நிலையத்துக்கு உடனே டிரான்ஸ்ர் செய்யப்பட்டார். சுனிதாவை ஏன் டிரான்ஸ்பர் செய்தீர்கள் என்ற கேள்விகள் சமூகவலைதளங்களில் எழ ஆரம்பித்தன. இந்நிலையில், சுனிதா தனது வேலையை ராஜினாமாவே செய்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் வெளிவந்துள்ளன.
கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் சுனிதாவுக்கு ஆதரவாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் அவரது ராஜினாமாவை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறை உள்ளது என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.