தமிழ்நாட்டில் தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

தண்டோரா அல்லது பறை மூலம் சத்தமாக இசைத்து பின்னர் மக்களுக்கு சொல்ல வேண்டிய அறிவிப்புகளை ஊரகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஊரில் உள்ள தெருக்களில் நின்று சத்தமாகச் சொல்லிவிட்டு செல்வார்கள்.

அரசு அறிவிப்புகள், கனமழை எச்சரிக்கை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மக்களை எச்சரிப்பதற்காக தண்டோரா போடும் பழங்கால பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளியில் திருடப்பட்ட பொருட்களை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கையானது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தண்டோரா முறை மூலம் தான் வழங்கப்பட்டது. அப்படி தண்டோரா அறிவிப்பை சொல்லும் பணியாளர்கள் இறுதியில் ‘சாமியோவ்’ என்று சொல்லும் நடைமுறையும் உள்ளது.

இந்நிலையில் தண்டோரா போடுவதை நாகரிக காலத்திலும் தொடரும் அவலம் என்று தலைப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். ஒருசிலர் இதுபோன்ற பணிகளுக்கு ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் ‘தண்டோரா’ போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.