காரைக்குடி நகராட்சியில் 20 நாட்களுக்கு மேலாக தெருவிளக்கு எரியாததை கண்டித்து மின்கம்பத்தில் அரிக்கேன் விளக்கு ஏற்றி மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
 
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டுக்கு உட்பட்டு 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவ்வார்டுக்கு உட்பட்ட சி.மெ.வீதி, நான்கு ரோடு சந்திப்பு, வெங்கடாசலம் செட்டியார் வீதி, சத்திய நகர் உட்பட 7க்கும் மேற்பட்ட வீதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தெருவிளக்கு எரியவில்லை.
 
இதனால் இரவு நேரங்களில் பாதாள சாக்கடை பள்ளங்களில் மக்கள் தடுமாறி விழுவது வாடிக்கையாகி வருகிறது. பள்ளங்களில் விழுந்து பலர் காயமடைந்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தெருவிளக்கை பராமரிக்கும் தனியார் நிறுவனத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.
 
இதனால் அப்பகுதி மக்கள், நான்கு ரோடு சந்திப்பு பகுதியிலுள்ள மின்கம்பத்தில் அரிக்கேன் விளக்கு ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
 
இதேநிலை தொடர்ந்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மக்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஏஐஒய்எப் அமைப்பு சிவாஜிகாந்தி கூறுகையில், ‘நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது.
 
தெருவிளக்கு பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பல லட்சம் வரை பணம் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் முறையாக பராமரிப்பது இல்லை.
 
நகராட்சி நிர்வாகத்திடம் தெருவிளக்கு குறித்து புகார் அளித்தால் தனியாரிடம் புகார் அளிக்க சொல்கின்றனர். ஆனால் தெருவிளக்கு எரியாத பகுதிகளை கண்டுகொள்வது கிடையாது. புகார் அளித்தாலும் சரி செய்வது கிடையாது. 27வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் விளக்கு இல்லாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால் விரைவில் நகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றார்.