விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவை விவகாரத்து செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளருமான அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில், கடந்த 15-ம் தேதி அமேசான் பிரைமில் வெளிவந்த வெப் சீரிஸ் ‘Paatal Lok’. விறுவிறுப்பான கதை, நிழல் உலகின் கதைக்களம் என இது பல தரப்பு மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஆனால் ‘Paatal Lok’ வெப் சீரிஸில் பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வெப் சீரிஸில் வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாஜக MLA நந்த்கிஷோர் குர்ஜார். இதனையடுக்கு புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுஷ்கா ஷர்மா மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

மேலும், தொடரின் ஒளிபரப்பைத் தடை செய்ய வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நந்த்கிஷோர் குர்ஜார், “தேசியப் பாதுகாப்பு சட்டம் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வெப் சீரிஸ்கள் தடை செய்யப்பட வேண்டும்.

விராட் கோலி ஒரு தேசபக்தர். மேலும், இந்தியா மீது மரியாதை உடையவர். எனவே, அவர் அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இவரது இந்தக் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: களைகட்டும் அமேசான் பிரைம்- தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீடு