விஜய் இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு “தலைவி” என்று தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ப்ரியதர்ஷினி நித்யா மேனனை வைத்து அயர்ன் லேடி என்ற பெயரில் இயக்கி வருகிறார். அண்மையில், அயர்ன் லேடி படத்தின் ஃபர்ஸட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி.24) முன்னிட்டு விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தலைவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்காக கடந்த 9 மாதங்களாக முதற்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. தலைவி படத்தில் யார் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் என நான்கு மொழிகளில் உருவாகிறது. படக்குழு, ஜெயலலிதா பயோபிக்கிற்காக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ப்ரியதர்ஷினி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தி அயர்ன் லேடி படம் திரைக்குவர இருப்பதாகவும் அறிவித்துள்ளார். படத்துக்கான திரைக்கதை புத்தகத்தையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கவுதம் மேனன் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணைய தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.