வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.
 
இந்தத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே, கதிர் ஆனந்த் எளிதில் வெற்றி பெறுவார் என்ற பேச்சு நிலவிய நிலையில், கடந்த மார்ச் 30-ந் தேதியும், ஏப்ரல் 1 -ந் தேதியும் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் குறிவைத்து காட்பாடியில் அதிரடி சோதனை நடத்தினர்.
 
இந்தச் சோதனையில் துரைமுருகனின் ஆதரவாளர் சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி ரூ 11.45 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
அந்த பணத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என துரைமுருகன் கூறிய நிலையில் ..
 
பணம் பறிமுதல் செய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு, தேர்தல் பிரச்சாரமும் ஓய்வடைந்த அடுத்த சில நிமிடங்களில் இந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 
 
தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும், திட்டமிட்டு இதற்கு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் துரைமுருகன் அமைதியாக தெரிவித்துள்ளார்.
 
இதே போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.