பெங்களூரு எலகங்காவில் நடந்துவரும் விமான கண்காட்சியின் போது வாகனம் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் கருகி நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இது சதி வேலையா என்று விசாரணை நடந்து வருகிறது.பெங்களூரு எலகங்காவில் இரண்டாண்டுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி சாகச நிகழ்ச்சிகள் நடக்கும். அதன்படி இவ்வாண்டு பிப்ரவரி 20ம் தேதி கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது.
 
இக்கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.
 
இந்த கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய், சாரங், யகோட் லான்ஸ், லகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1, ஹாக் ஐ, உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகின்றன.
 
இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.20 மணிக்கு விமான கண்காட்சி நடந்துவரும் மைதானத்தின் 5வது நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில் திடீரென புகை வெளியேறியது. அதை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உடனடியாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தார்.
 
5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென பிடித்துக் கொண்டதால் ஒன்றன் பின் ஒன்றாக கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
 
இதனால் கண்காட்சி மைதானம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இப்புகையால் 10 கி.மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது.
 
சம்பவம் நடந்த 15 நிமிடம் கழித்து 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின.
 
கார்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் உயரமாக கோரபுல் வளர்ந்துள்ளது. தீ பிடித்ததும் புல் எரிந்தது. காரின் டீசல் டேங்க் மற்றும் டயர்கள் வெடித்து சிதறின.
 
இதனால் குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்டது. பிஎம்டப்ளிலிவ், பார்ச்சூனர், ஜாக்கூவர், இனோவா உள்பட பல விலை உயர்த்த கார்கள் தீயில் கருகியதின் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து சிகரெட்டை அணைக்காமல் வீசியதால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
 
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்வதற்காக பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.சி.சிந்து வந்தார்.
 
அப்போதுதான் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, கண்காட்சி நிறுத்தப்பட்டது. 3 மணி நேரம் கழித்து தீ முழுமையாக அணைக்கப்பட்டு புகை நின்றதை தொடர்ந்து மீண்டும் பகல் 3.15 மணிக்கு விமான கண்காட்சி தொடங்கியது. எல்சிஏ விமானத்தை பி.சி.சிந்து இயக்கினார்.
 
கடந்த 1ம் தேதி எச்ஏஎல் விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி, 2 பைலட்டுகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
 
அதைத் தொடர்ந்து, விமான கண்காட்சியின்போது சாகசம் செய்வதற்காக கடந்த 19ம் தேதி சூரியகிரண் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டபோது இரு விமானங்கள் மோதிக்கொண்டதில் ஒரு விமானி உயிரிழந்தார்.
 
இந்த சம்பவங்கள் மக்கள் மனதில் இருந்து இன்னும் மறையாத நிலையில், நேற்று நடந்த தீ விபத்து மூன்றாவது சம்பவமாகியுள்ளது. இதற்கிடையே, விபத்து காரணமாக கண்காட்சியில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்ட சூரியகிரண் விமானங்கள் நேற்று முதல் கண்காட்சியில் பங்கேற்றன.