வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்தால், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதுவரை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் சுமுக தீர்வு எட்டப்படாததால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாளை நாடு தழுவிய முழு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு (பாரத் பந்த்) விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட அதன் சில ஆதரவு கட்சிகள் தவிர்த்து, நாட்டின் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்து வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக எம்.பி திருச்சி சிவா, ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா, காங்கிரஸ் கட்சியின் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே கூறுகையில், “மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் சட்டவிரோதமானவை.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. இந்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதற்கு இலவசமாக வாதாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாட்டின் நலன் கருதியும் விவசாயிகள் நலன் கருதியும் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை முடியும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து அறிவிக்கை வெளியிட வேண்டும்” எனக் வலியுறுத்தி உள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஐ.நா.சபை ஆதரவால் மோடி அதிர்ச்சி