கட்டுமானத் துறைக்கான மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசு புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் அமைப்பதாக அறிவித்ததற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதிய மணல் குவாரிகளை திறக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் ஆற்றில் மணல் எடுக்கும் முறையை எந்திர முறைக்கு மாற்றவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆறுகளை அழித்து விடும். தமிழ்நாட்டில் கட்டுமானத் துறைக்கான மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மணல் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2022 ஜனவரியில் புதிதாக ஆற்றுப் படுகைகள் மற்றும் ஆற்றின் வடிகால் பகுதிகளில் மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை திமுக அரசு எடுத்தது.

அதன்படி 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத் துறை, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட 30 குவாரிகளில் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி மணல் அள்ளும் முறைக்குப் பதிலாக எந்திரங்களை பயன்படுத்தி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கான அனுமதிகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தொடங்கி இருப்பது ஆறுகளின் அழிவுக்கு வித்திடும்.

எனவே தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் திறப்பதைக் கைவிட வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் குவாரிகளையும் மூடி, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.