ஊட்டி- மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, ரூ.475 என இருந்த பயணக் கட்டணம், ரூ.3000 என பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்படுகிறது. 1908ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது.

இந்த ரயில் ஊட்டியின் மலை அழகு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் சுமார் 46 கி.மீ தூரம் பயணிக்கும். 2005 ஜூலை மாதம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில், இமயமலையில் உள்ள டார்ஜிலின்ங் ரயில் சேவை மற்றும் ஊட்டி மலை ரயில் சேவை ஆகியவற்றை சேர்த்தது.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவது போல, ரயில்வே துறையையும் படிப்படியாக தனியார்மயமாக்கி வருகிறது. அந்த வகையில் பாரம்பரியமிக்க ஊட்டி- மேட்டுப்பாளையம் சிறப்பு கட்டண ரயில் சேவை தனியாருக்கு விடப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சில தினங்களுக்கு முன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் இந்த முறை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் அல்லாமல் தனியார் நிறுவனம் நிர்ணயித்த கொள்ளை கட்டணத்தில் இயக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே முத்திரைகள் எதுவும் இல்லாமல் ‘டி.என்.43’ என்ற பெயரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சிறப்பு கட்டண மலை ரயில் தனியார்மயமாக்கப்பட்டு இயக்கம் துவங்கியது. இந்த தனியார் மலை ரயிலில், இன்ஜின் ஓட்டுனர்களை தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள்.

இந்த தனியார் மலை ரயில் பயணம் செய்ய ஒரு சுற்றுலா பயணிக்கு, பயணக் கட்டணமாக, 3,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. ரூ.475 என இருந்த பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து ரூ.3000 என வசூலிக்கப்படுவதால், பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தனியார் மலை ரயிலில், காவி உடை அணிந்து விமான பணி பெண்களை போன்று பயணிகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பதற்கு ஒவ்வொரு பெட்டிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயிலின் முன்புற பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டு உள்ளது.

இதனிடையே வழக்கமாக குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் மலை ரயில் சேவையை துவங்காமல், தனியார் சிறப்பு கட்டண ரயில் சேவைக்கு மட்டும் சேலம் கோட்ட ரயில்வே அனுமதி அளித்துள்ளதற்கு கண்டனங்கள் எழுந்து உள்ளன.

ஜனவரியில் இருந்து, தினமும் தனியார் மலை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இயங்கிய மலை ரயில் இயக்கப்படும் போது, தனியார் மலை ரயிலின் நேரம் மாற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் மலை ரயிலை முற்றிலும் தனியார்மயமாக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாஜகவில் பாலியல் தொல்லை; பாஜக மகளிர் அணி செயலாளர் பகீர் புகார்