வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மத்திய பாஜக அரசு அமைல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று (டிசம்பர் 08) நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் நேரில் சென்று தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த வாரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நான் இங்கு முதல்வராக இங்கு வரவில்லை. நான் விவசாயிகளுக்குச் சேவை செய்ய வந்துள்ளேன்.

விவசாயிகள் தங்கள் கடும் உழைப்பு மூலம் உணவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு இன்று கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த துயரைத் துடைக்கும் பணி உள்ளது” எனத் தெரிவித்தார். இது பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெறும் பாரத் பந்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்வதை தடுக்க திட்டமிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, அவரது வீட்டுக்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி சௌரவ் பரத்வாஜ் கூறும்போது, கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றி வேலிகள் இட்டு யாரும் உள்ளே செல்லவோ வீட்டில் உள்ளோர் வெளியே வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். மேலும் வாசலில் பாஜகவினர் கூட்டமாகக் கூடி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகரின் முதல்வரையே, மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளதற்கு, மோடி அரசின் அராஜகம் எல்லை மீறிச் சென்றுள்ளதாக நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

விவசாயிகளுக்காக இலவசமாக வாதாட தயார்- உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு