மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ராஜேஷ் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 10க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக முதல்வர் பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர் ராஜேஷ் தாஸ். முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவரான ராஜேஷ் தாஸ் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானராக இருந்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவி என்பது காவல் துறையில் முக்கியமானதாகும். அந்தப் பதவியில் திரிபாதி இருக்கும்போது எதற்காக சிறப்பு டிஜிபி என்ற பதவியை ராஜேஷ்தாஸுக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது.

கடும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் மேலிட செல்வாக்கு காரணமாக ராஜேஷ் தாஸ், அந்தப் பதவியில் நீடித்தார். அதிமுக அரசின் ஆதரவு பெற்றவர் என்பதால், தனது அதிகாரப்பசியால் காவல்துறையினரையும் வதைத்து வந்துள்ளார் ராஜேஷ் தாஸ்.

இந்நிலையில், பிப்ரவரி 22 ஆம் தேதி சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது, பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது.

மேலும், பாலியல் புகாரை அடுத்து, ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி காவல்துறை 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக காவல்துறையில் தன் மேலதிகாரி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்ய 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழக டிஜிபி திரிபாதியிடம் வலியுறுத்தியுள்ளனர். சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

இதுபோன்று காவல்துறையில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக நடைபெறக்கூடிய பாலியல் தொந்தரவுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து டிஜிபி ஒருவர் மீதே புகார் கூறியுள்ளது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோரை கைது செய்யக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யார் இந்த ராஜேஷ் தாஸ்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் தாஸ், 1989ல் ஐபிஎஸ் அதிகாரியானார். இவரது மனைவி பீலா ராஜேஷ் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர். இவர் மீது கொரோனா காலத்தில் அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகள் எழுந்தது.

குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான சொகுசு பங்களா கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், கணவரான ராஜேஷ் தாஸ் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமாக ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி ஆகிய இடங்களில் பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், கொரோனா காலத்தில் பல டென்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதனிடையே தற்போது பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேஷ் தாஸ் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியபோதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர தென்மண்டல ஐஜியாக பணியாற்றியபோது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டியதாக ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

கூடங்குளம் போராட்ட பிரச்னையில் தடியடி உள்ளிட்ட பெரும் சர்ச்சைகளுக்கு காரணமானவர் ராஜேஷ் தாஸ். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டபோது அங்கு பணியிலிருந்தவர் ராஜேஷ் தாஸ்.

மேலும் திருச்சி காவலர் தாக்கப்பட்ட சம்பவம், பெண் டிஎஸ்பிக்களின் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜேஷ் தாஸ் மீது உள்ளது. மாநில மனித உரிமை ஆணையம், ராஜேஷ்தாஸுக்கு அபராதம் விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு