பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கூடுதல் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி காவல்துறை 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்து வந்தார். இவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர்.

டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, வழியில் மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்த நின்ற மாவட்ட பெண் எஸ்ஐ (ஐபிஎஸ்) அதிகாரியை, காரில் ஏற்றிக்கொண்ட ராஜேஷ் தாஸ்,

அவரிடம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அதிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சி செய்ததாகவும் புகார் எழுந்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து காவல்துறை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக பெண் எஸ்ஐ அதிகாரி காரில் சென்னை நோக்கிசென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 30க்கும் மேற்பட்ட காவலர்களுடன் அவரது காரை மறித்த மாவட்ட எஸ்பி.கண்ணன்,

ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்க வேண்டாம் என்றும், ராஜேஷ் தாஸிடம் போனில் பேசினால்தான் காரை அனுமதிப்பேன் என்றும் கூறி காரின் சாவியை எடுத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். பின்னர் மாவட்ட எஸ்பி.கண்ணன் மீதும் புகார் அளிக்க நேரிடும் என பெண் எஸ்ஐ கூறியதை அடுத்து அவரை செல்ல அனுமதித்துள்ளனர்.

இதற்குப் பிறகு சென்னை வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, காவல்துறை காவல்துறை டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன், ராஜேஷ்தாசுக்காக பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சமரசம் பேச முயன்ற தனிப்பிரிவு ஆய்வாளர் ஒருவர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. மேலும் டிஜிபி திரிபாதி, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த பாலியல் புகார் குறித்து விசாரணை செய்து வரும் சிபிசிஐடி காவல்துறை, ராஜேஷ் தாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 354, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை அத்துமீறி மறித்த புகாரில் சிக்கியுள்ள எஸ்.பி. கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார்… விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு