சென்னையில் இருந்து விமானத்தை கடத்தி வந்து கொழும்புவை தாக்கி அழிக்க 2009ல் விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாதெரிவித்துள்ளார்.

இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த 2009ல் இறுதிக்கட்ட போரின்போது, கடைசி 2 வாரங்கள் இலங்கையின் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சராக, தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவி வகித்தார். இந்த போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் சிறிசேனா கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்துக்கு இடையே, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை மக்களுடன் சிறிசேனா நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறிய விவரம் ” இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, முன்னாள் பிரதமரும் அங்கில்லை. பாதுகாப்பு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ தளபதியும் அப்போது அங்கில்லை. விடுதலைப் புலிகள் நடத்தி வந்த விமானத் தாக்குதலுக்கு பயந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

கொழும்புவில் உள்ள ராணுவ முகாம்களை சென்னை மற்றும் வேறு காட்டுப் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் வந்து தாக்கி அழிக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருந்தனர். அப்போது தான், நான் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.

அனைவரும் இந்த விமானத் தாக்குதலுக்கு பயந்துதான் அங்கிருந்து தப்பி விட்டனர். நானும் கொழும்புவில் தங்கியிருக்கவில்லை. தலைநகரை விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்ற எண்ணத்தில் நானும், கொழும்புவை விட்டு வெளியில் சென்று பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்தேன். புலிகளின் இந்த தாக்குதல் திட்டம் பற்றி மற்றவர்களை விட எனக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.