கழுதைப் பால் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கழுதை இறைச்சி பாலியல் திறனை மேம்படுத்துகிறது எனக் கூறி, ஆந்திராவில் கழுதை வியாபாரம் களைக்கட்டியுள்ளது.

ஆந்திராவில், தற்போது அதிகம் விரும்பப்படும் விலங்குகளின் பட்டியலில் கழுதையும் சேர்ந்துள்ளது. பசும்பால், எருமைப் பால், ஆட்டுப் பால் ஆகியவற்றை விட கழுதைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல் கோழி மற்றும் ஆடு இறைச்சி தவிர, கழுதை இறைச்சியும் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்காக கழுதைப் பால் குடித்து வருவதாகவும், அதன் இறைச்சியை உண்பதால் பாலியல் ஆற்றல் பெருகுவதாகவும் ஆந்திர மாநில மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “கழுதைப் பாலில் உள்ள புரதம் ‘ராஜ புரதம்’ என்று அழைக்கப்படுகிறது. மாடு மற்றும் எருமைப் பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு, கழுதைப் பால் வழங்கப்படுகிறது. ஆனால் கழுதை இறைச்சியை உட்கொள்வதால் பாலியல் திறன் அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் விதிமுறைகளின்படி, கழுதைப் பால் மற்றும் இறைச்சி மனிதர்கள் உட்கொள்ளும் உணவுகளின் பட்டியலில் இல்லை. அவற்றின் கூறுகள் என்ன? அவற்றை உட்கொண்ட பிறகு உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான விடை இல்லை.

நாம் வழக்கமாக உட்கொள்ளும் கோழி, ஆடு இறைச்சிகள் கூட, பருவநிலை மாறும்போது அல்லது நீண்ட நேரம் சேமித்து வைக்கப்பட்டால், நச்சுத்தன்மையடைந்து மனித உடலுக்குச் சேதம் விளைவிக்கும். எனவே, எந்தச் சோதனையும் செய்யாமல் கழுதை இறைச்சியை உட்கொள்வது நல்லதல்ல” என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் ஆந்திராவின் கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், கர்னூல், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகா, ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் கழுதைப் பால் மற்றும் இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது.

[su_image_carousel source=”media: 22609,22610″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதனால் கழுதைகளின் சட்டவிரோதக் கடத்தல் அதிகரித்துள்ளது என்று காக்கினாடாவை தளமாகக் கொண்ட விலங்கு மீட்புக்கான தன்னார்வ அமைப்பான அனிமல் ரெஸ்க்யூ ஆர்கனைசேஷன் கூறியுள்ளது.

இந்த அமைப்பின் நிறுவனர் சுராபத்துலா கோபால் கூறுகையில், “கழுதை இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதால், இறைச்சியை விற்கும் கடைகள் காளான்களைப் போல முளைத்து வருகின்றன. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ஆந்திராவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தற்போது, ஆந்திராவில், ஒரு கழுதையின் விலை, ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்கப்படுகிறது. இதனால், மக்கள் கழுதைகளை பிற மாநிலங்களிலிருந்து தருவித்து இங்கு விற்பனை செய்கிறார்கள். ஏற்கனவே நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆந்திராவில் இது இன்னும் மோசமாக உள்ளது.

ஸ்ரீகாகுளம் முதல் கர்னூல் வரை மாநிலத்தின் பல மாவட்டங்களில் கழுதை இறைச்சி மற்றும் பால் விற்பனை செழிப்பாக உள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில், கழுதைகளை உயிரியல் பூங்காக்களில் மட்டுமே காண முடியும்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார் சுராபத்துலா கோபால்.

கழுதைப் பால் மற்றும் இறைச்சி குறித்து பொதுமக்கள் கருத்து:
இதுகுறித்து விஜயவாடாவைச் சேர்ந்த தேவம்மா என்பவர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு நுரையீரல் பிரச்சினை உள்ளது. நான் கழுதைப் பால் குடிக்க ஆரம்பித்த பிறகு, அது குறைந்தது. அந்தப் பாலைக் குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம். இது நல்ல பலனைத் தருகிறது. நான் இறைச்சியையும் சாப்பிடுகிறேன். எனக்கு எந்தப் பிரச்சனையும்இல்லை என்று கூறினார்.

அதேபோல் ஸ்ரீகாகுளம் நரசண்ணாபேட்டையைச் சேர்ந்த நாராயணா கூறுகையில், ஒரு கிளாஸ் பாலை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், அனைவரும் இந்தப் பாலைக் குடிக்கிறோம். மூட்டு வலி, சுவாசப் பிரச்னைகளை குணப்படுத்த கழுதைப் பால் உதவியுள்ளது. நாங்கள் இறைச்சி சாப்பிடதில்லை. ஆனால் எங்கள் கிராமத்தில் அதுவும் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாமல் மக்கள் கழுதை இறைச்சி மற்றும் பாலைப் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் விலங்குநல ஆர்வலர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து புகார்; வெடிக்கும் சர்ச்சை