மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, எம்.பி.க்கள் உட்பட 19 பேர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ஒரு வாரத்திற்கு தடை விதித்து மாநிலங்களவை துணைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு வாரமாக இரு அவைகளும் முடங்கியது. இன்றும் (26.07.2022) மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து பதாகைகளைக் காட்டி முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம்.எம்.அப்துல்லா, கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் உள்ளிட்ட உட்பட 19 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256-ன் கீழ் இடைநீக்கம் செய்து மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள்: எம்.எம்.அப்துல்லா, எஸ் கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி, என்.வி.என்.சோமு (திமுக), ஏ.ஏ. ரஹீம், வி சிவதாசன், எம்.சண்முகம், (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்ட்), சுஷ்மிதா தேவ், மௌசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வர், எம்.டி. நதிமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ், பி லிங்கய்யா யாதவ், ரவிஹந்திர வத்திராஜு, தாமோதர் ராவ் திவகொண்டா (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), .

அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

முன்னதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.