காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேரை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதற்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், மற்றும் சோனியா, ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கூட்டத்தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது.

மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று (25.07.2022) அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பிற்பகலில் மக்களவை தொடங்கியது முதலே பதாகைகளுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைப் போலவே மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே சபாநாயகரின் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகிய 4 பேரும் மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பினர்கள் யாரும் பதாகைகள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களவை சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், “காங்கிரஸின் 4 உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழுதுமே நடக்காத ஒன்று.

இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று. இந்த இடை நீக்கம் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத்தில் எங்கள் பேச்சுரிமையை நசுக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரலே ஒலிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். எங்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் சொல்லாமல் வேறு எங்கு சென்று சொல்வது” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.