அதிமுக எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உச்சமடைந்து, மாறி மாறி இருதரப்பினரும் கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியதாகவும்,

இதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும், சிபிஐ விசாரணை கோரியும் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் நெல்லை-செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுப்படுத்தி பலப்படுத்தும் ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம், வெங்கடாஜலபதி அன்ட்கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த டெண்டர்களை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே வருவதால் வெளிப்படையான விசாரணைக்காக சிபிஐ விசாரணைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (26.07.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில், “இந்த வழக்கில் எங்களது வழக்கறிஞரை மாற்ற வேண்டி இருப்பதால் 3 வார கால அவகாசம் தர வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே போல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்பது தொடர்பான தகவல் எங்களிடம் பகிரப்படவில்லை. எனவே நாங்கள் விசாரணைக்கு தயாராகவில்லை. எனவே எங்களுக்கும் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு 3 வாரம் கால அவகாசம் அளிக்க முடியாது என்று கூறி, எடப்பாடி பழனிசாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இது அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.