திருவண்ணாமலையில் உள்ள விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் மற்றும் அவருடன் வந்திருந்த பிற விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தாலிப் சிங்(ஹரியானா), லிங்கராஜ்(ஒதிசா) மற்றும் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் செங்கம் கிராமத்தில் தடுக்கப்பட்டு ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

”சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளை சந்திக்க திருவண்ணாமலைக்கு வந்தோம். பாதிவழியில் செங்கம் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். நாங்கள் விவசாயிகளை சந்திக்கக்கூடாது என்பதற்காக தடுக்கிறார்கள். உண்மையில் விவசாயிகள் தங்களது நிலங்களை இந்த திட்டத்திற்காக தர விரும்புகிறார்களா? அல்லது கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? என்று அறிந்துகொள்ள வந்தோம். அருண் என்ற ஒரு விவசாயியை சந்தித்தோம். அடுத்த இடத்திற்கு செல்லும்முன் தடுத்து தனியார் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். அந்த சமயத்தில் அருண் மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார், அதை காவல்துறையினர் பிடுங்கிக்கொண்டனர்,” என்று அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து பேசிய ஒரு காணொளியில் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

”நான் விவசாயிகளை சந்தித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். நான் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளை சந்தித்தால், எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறது,” என்று யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக உரிமைகளை அடக்குவதற்கு அதிமுக அரசு பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் கேட்டபோது “யோகேந்திர யாதவ் மற்றும் பிற நபர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கிராமங்களுக்குள் செல்ல அனுமதித்தால் மக்களிடம் அமைதியின்மை ஏற்படும் என்று எண்ணுகிறோம். அதனால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவுள்ளோம்,” என்று தெரிவித்தார் சிபிசக்கரவர்த்தி.