பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் செப்.14 ஆம் தேதியும், செப்.17 முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரிவில் சேர்க்கை என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24 ஆம் தேதி நிறைவு பெற்றது.

இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேர் உள்பட ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் பிஇ., பிடெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், கலந்தாய்வுக்கான அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில், கலந்தாய்வுக்கு தகுதிபெறும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 7.5% ஒதுக்கீட்டின்படி, அவர்களுக்கு சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

இதே தேதியில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் நடைபெறுகிறது. மேலும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறும்.

துணை கலந்தாய்வு அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும், அருந்ததியினர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும், நடைபெறும். அக்டோபர் 25 ஆம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

போலி பத்திரப்பதிவை தடுக்க புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு