மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
 
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (42). இவர் 1997ம் ஆண்டு காவல் துறையில் காவலராக பணிக்கு சேர்ந்தார். தற்போது எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் தங்கி சென்னை மாநகர காவல் துறையில் மெரினா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
 
இவருக்கு நீலா (35) என்ற மனைவியும், கீர்த்தனா (13), சரிகா (11), தனு (8) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் மதிய உணவு தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்று உள்ளார்.
 
வெகு நேரமாக அறையை விட்டு ஸ்ரீதர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி உள்ளே சென்ற பார்த்த போது, ஸ்ரீதர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
 
இதை பார்த்து அதிச்சியடைந்த அவரது மனைவி அலறி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தனது கணவனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
 
அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ஸ்ரீதர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது மன அழுத்தம் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்..