கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதானி குழுமம் தனக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டது.
 
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான சூழலியல் அனுமதிகளைப் பெறும் முன்பாக, சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யவேண்டும்.
 
அதற்காக 2018, நவம்பரில் துறைமுக நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. 2019-ம் ஆண்டு ஜனவரி வரை அந்த விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டது.
 
அந்தச் சமயத்தில் ஜனவரி 18-ம் தேதி, புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, ஜனவரி 20-ம் தேதி, காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விண்ணப்பத்துக்குக் கோப்பு எண் ஒதுக்கப்பட்டது.
 
இது திட்டமிடப்பட்ட சமயத்திலேயே, இதனால் ஏற்படப்போகும் சூழலியல் பேரழிவுகள் மற்றும் பாதிக்கப்படப்போகும் மக்களின் வாழ்வாதாரம் பற்றி இயற்கை ஆர்வலர்கள் இதன் அபாயத்தை விவரிக்க தொடங்கினார்கள்
 
காட்டுப்பள்ளி துறைமுகத்தின் இப்போதைய பரப்பளவு 330 ஏக்கர். அவர்கள் முன்வைத்துள்ள விரிவாக்கத் திட்டத்தில் கூறியுள்ள பரப்பளவு 6,200 ஏக்கர்.
 
ஆதாவது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம் கேட்கிறார்கள். அதில் 2,000 ஏக்கர் கரைக்கடலில் வருகிறது. காட்டுப்பள்ளிக் குப்பம் கரைக்கடல் பகுதி, முழுக்க முழுக்க ஆழமற்ற சேற்று நிலங்களைக்கொண்டது.
 
இங்குதான் நண்டுகள், இறால்கள், பல மீன் வகைகள், சிறு ஆமைகள் கிடைக்கின்றன. அது அந்தப் பகுதி மீனவர்களின் முக்கியமான வாழ்வாதாரப் பகுதி. அந்தக் கரைக்கடலையும் பெருமளவிலான விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங் களையும் இந்தத் திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப் போகிறார்கள்.
 
திட்டப்படி, அந்தக் கரைக்கடலில் மணல் கொட்டி நிலமாகச் செய்யப்படும். அதாவது கரைக்கடல் அழிக்கப்படும். கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள் அனைத்தும் நிலமாக மாறும்.
 
மொத்தத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்தவந்த சூழலியலும் நில அமைப்பும் தலைகீழாகப் புரட்டிப்போடப்படும். அங்கு கட்டுமானங்கள் நடைபெறும். நடுவில் குறிப்பிட்ட பகுதியை ஆழப்படுத்திக் கப்பல் வந்து நிற்பதற்கான வசதிகளைச் செய்துகொடுப்பார்கள்.
 
சுனாமி போன்ற பேரலைகளின்போது ஏற்படும் சேதங்களைக் குறைப்பதில் இதுபோன்ற சேற்றுப் பகுதிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அதை அழிப்பதற்கான திட்டத்தைச் சூழலியல் பேரழிவுக் கான திட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
 
இந்தத் துறைமுக விரிவாக்கத்தில் மேலும் பெரிதாகக் கட்டப்படும் அலைத்தடுப்புச் சுவர் கடல் அரிப்பை அதிகப்படுத்தி அந்தப் பகுதியை முற்றிலுமாக விழுங்கிவிடும்.
 
இது நடந்தால், கொற்றலை ஆறு கடலுக்குள் சென்றுவிடும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பகுதியில் ஷோல் (Shoal) என்ற மணல் திட்டுகள் இயற்கையாக உருவாகியுள்ளன. எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகங்களில் கட்டப்பட்ட அலைத்தடுப்புச் சுவர்களால், வடசென்னைக் கடற்கரைகளில் நிகழ்ந்த கடல் அரிப்பு இங்கு வரை பாதிக்காத தற்குக் காரணம் இந்தத் திட்டுகள்தான்.
 
“பழவேற்காடு ஆபத்தான நிலையிலிருக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. உவர்நீர், நன்னீர் இரண்டுமே அங்கிருப்பதால் அது பறவை களுக்கு மிக முக்கியமான வாழிடமாக இருக்கிறது.
 
பூநாரை, நண்டு கொத்தி, கிளிஞ்சல் கொத்தி உள்ளிட்ட 200 அரிய பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில்கூட கருவயிற்று ஆலா என்ற அரிய கடற்பறவைப் பதிவு செய்யப் பட்டுள்ளது. நெடுந்தூரம் வலசை வரும் பறவை களுக்கு இந்த இடம் முக்கியமான தாப்பு (Stop over site). பறவைகள் மட்டுமின்றி, பல நீர்வாழ் உயிரினங்களும் நுண்ணுயிரிகளும் அங்கு அதிகம் வாழ்கின்றன. அவர்கள் செய்யக்கூடிய நீள்வெட்டுக் கட்டுமானங்கள் உயிர்ச்சூழலின் வாழ்வியலில் பல தடைகளை உருவாக்கும்” என்கிறார் பறவைகள் ஆய்வாளர் ப.ஜெகநாதன்.
 
இதற்கிடையே கடந்த ஜூன் 28-ம் தேதி பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிராம சபையைக் கூட்டி, ‘நாட்டின் இரண்டாவது பெரிய ஏரியை அழிக்கும் இந்தத் திட்டத்துக்குச் சூழலியல் அனுமதி தரக்கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விரிவாகவே பேசினார் ஜெய்ராம் ரமேஷ். “இந்தத் துறைமுகம் கட்டப்பட்டால், மதிப்பிட முடியாத அலையாத்தி வனச் செல்வமும் உப்பளங்களும் அழிந்துப்போகும். கடலுக்கும் ஏரிக்கும் இடையில் மெல்லிய தீவு போல நீளும் அடர்ந்த பசுமை வளமுடைய மணல் குன்றுகள் அடங்கிய எண்ணூர் – பழவேற்காடு பகுதி திரும்பவும் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து போகும்.
 
துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்கள், பழவேற்காடு ஏரியையும் கடலையும் பிரிக்கும் குறுகிய நிலப்பகுதியை அரித்துவிடும். அதன் விளைவாக, ஏரியும் வங்கக்கடலும் ஒன்றிணையும்.
 

இயற்கை வளத்துடன் தற்போது காட்சி அளிக்கும் பழவேற்காடு ஏரி

கடல் மற்றும் பழவேற்காடு ஏரியை நம்பி வாழும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் இந்தத் திட்டத்தால் ஆபத்தில் இருக்கிறது.
 
மேலும் இந்தத் தீவு, கடல் சார்ந்த இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் பிரதான அரண். இந்தச் சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பது, இங்கு வாழும் பத்து லட்சம் பேரை பேரழிவில் தள்ளும்.
 
எனவே இந்தத் திட்டத்தை ரத்துசெய்து அந்த மக்களைக் காக்கும்படி சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பாராளுமன்றத்திலும் பேசியுள்ளார்.
 
சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் ஒரு படி மேல சென்று , “இந்தத் திட்டத்தை இதுவரைக்கும் மாநில அரசு ஏன் கேள்வி கேட்காமல் விட்டுவைத்திருக்கிறது?
 
பேரிடர்கள் நடந்த பிறகு மனிதர்களைக் காப்பாற்றுவது மட்டுமே அரசின் வேலை அல்ல. பேரிடர் ஏற்படாமலிருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பும் அரசினுடையதுதான்.
 
உப்பளங்களை, கரைக்கடலை மணல் கொட்டி நிரப்பப்போவதாகச் சொல்லும்போதே அதைக் கேள்வி கேட்காதது ஏன்? இந்தத் திட்டம் வரவுள்ள செங்கனிமேடு பகுதியில் மட்டுமே நூற்றுக்கணக்கான கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் நீராதாரம் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தையும் அவர்கள் கையகப்படுத்த அனுமதித்தால் இந்தக் கால்நடைகளைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்றார்.
 
இதுகுறித்து விளக்கம் அறிய ஜூலை 17-ம் தேதி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்னரசு கருனேசனை அவரின் ennarasu.karunesan@adani.com என்ற மின்னஞ்சல் தொடர்புகொண்டாலும் பயன் இல்லை
 
இந்தத் திட்டம் குறித்து திருவள்ளூர் மாவட்டத்தின் பேரிடர் மேலாண்மைப் குழுவுக்குத் தலைமையிடமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “ஜூலை 15-ம் தேதி காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார்கள். அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக் கிறார்” என்றனர்.
 
இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ், கடலில் நிலமீட்பு செய்யப்படவுள்ள பகுதியில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்துக்கு உட்பட்டுச் செயல்படும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் குழாய்கள் செல்கின்றன.
 
ஆனால் சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் “எங்கள் குழாய்களின் மீது அவர்களால் எந்தக் கட்டுமானத்தையும் செய்ய முடியாது. ஒருவேளை அவர்கள் வேண்டுகோள் வைத்தால் குழாய்களை மாற்றியமைப்பதற்கென ஒரு தொகையை வைப்பு நிதியாக வாங்கிக்கொண்டு, குழாய்களை மாற்றியமைப்போம்” என் கிறார்.
 
அதானி பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு துணிவுடன் இறங்கினால் மட்டுமே பழவேற்காட்டை மட்டுமல்ல. சென்னையையும் இயற்கை அழிவில் இருந்து காக்க இயலும் என சொல்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள் .. செய்யுமா தமிழக அரசு ..