பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலை உயர்வால், அத்யாவசிய பொருட்கள் உட்பட எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடுமையானது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.33 வரியும்,1 லிட்டர் டீசலுக்கு ரூ.32 வரியும் வசூலிக்கப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை, அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் அரசே காரணம் என சொல்கிறார் மோடி