கோவா சட்டப்பேரவை உறுப்பினர் பிரான்சிஸ் டிசெளசா உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாஜக பெரும்பான்மை இழந்துவிட்டது. எனவே, காங்கிரûஸ ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று மாநில ஆளுநருக்கு, காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
 
 40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில், 16 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் விளங்கி வந்தது. எனினும், 14 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஜக, கோவா முன்னேற்றக் கட்சி மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலா 3 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவு என மொத்தம் 24 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
 
இந்நிலையில், ஷிரோதா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் மாந்திரேம் தொகுதியின் உறுப்பினர் தயானந்த் சோப்தே ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
 
இதையடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 16-லிருந்து 14-ஆகக் குறைந்தது. மேலும்,
 
மாஸ்புஸா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரான்சிஸ் டிசெளசா மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவின் பலம் 13-ஆகக் குறைந்துள்ளது.
இந்த 3 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
 
 இந்நிலையில், கோவா எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர், மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
கோவா சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40-லிருந்து 37-ஆகக் குறைந்துள்ளது. ஏற்கெனவே, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு, அக்கட்சி உறுப்பினர் பிரான்சிஸ் டிசெளசாவின் மரணத்துக்குப் பிறகு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையையும் இழந்துவிட்டது.
 
பெரும்பான்மை இழந்துவிட்ட பாஜகவுக்கு மற்ற கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்பு மிகவும் குறைவு; அக்கட்சிக்கான ஆதரவு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.
 
அத்தகைய கட்சி மாநிலத்தில் ஆட்சி செய்வதை அனுமதிக்கக் கூடாது. எனவே, பாஜக தலைமையிலான ஆட்சியைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட வேண்டும்; சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் காங்கிரûஸ ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்.
 
 
இதைச் செய்யாமல், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் முயற்சித்தால், அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும், சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும்.அவ்வாறு நடைபெற்றால், அதனைச் சட்டரீதியில் காங்கிரஸ் எதிர்கொள்ளும். எனவே, காங்கிரûஸ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை வலியுறுத்துகிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
உடல் நலக்குறைவு காரணமாக, கோவாவின் தோனா பெளலா பகுதியில் உள்ள தனது வீட்டில் முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழல் காணப்படுகிறது.
 
இந்த நிலையில் சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், எனவே தங்களை ஆட்சியமைக்க, ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.