உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்தவொரு குழுவையும் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் ஏற்க மாட்டோம்; மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளன.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசுடன் நடத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம், 4 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு நடத்த உள்ளது. அந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கம் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியின் எல்லைகளிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வெளியேற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்பதை வரவேற்கிறோம்.

ஒரு இடைக்கால நடவடிக்கையாக சட்டங்களை அமல்படுத்துவதை இடைநிறுத்துவது வரவேற்கத்தக்கது, ஆனால் அது ஒரு நிரந்தர தீர்வாகாது, எந்தவொரு நேரத்திலும் வேளாண் சட்டங்களை செயல்படுத்தப்படுவதை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு விவசாய சங்கங்கள் இந்த தீர்வைக் ஏற்கவில்லை.

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள்.

மேலும், இந்த தீர்ப்புக்குப் பின்னால் மத்திய அரசு உள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அரசுடன் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்த உள்ளோம்.

இந்திய விவசாயிகளும் இந்திய மக்களும் வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் நிச்சயம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்து 4 பேர் குழுவின் நிலைப்பாடு: விவசாயிகளின் பார்வை