பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (27.12.2021) காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மாணிக்க விநாயகம் பழம்பெரும் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையாவின் இளைய மகன். 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

இதுதவிர பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் மாணிக்க விநாயகம் நடித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக நேற்று (26.12.2021) இரவு மாணிக்க விநாயகம் உயிரிழந்தார். மாணிக்க விநாயகம் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்து, பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று காலையில் திருவான்மியூரில் வைக்கப்பட்டிருக்கும் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மாணிக்க விநாயகம் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
”இசை மரபிலே வந்த
மாணிக்க விநாயகம்
மறைந்துற்றார்

“விடைகொடு எங்கள் நாடே”
என்று பாடியவர் விடைபெற்றார்

நல்ல கலைஞன் – நல்ல மனிதன்
என்று இரண்டும் கூடிய
அபூர்வம் அவர்
குடும்பத்திற்கு நாம் ஆறுதல் சொல்லலாம் எவர் சொல்வது இசைக்கு…?” என்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.