பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக மாவட்ட நீதிபதிகள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஓய்வுபெறும் வயதை நெருங்கும் எட்டு நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 17 நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கூடிய அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர்களை பணி நீக்கம் செய்வது ஊக்க ஊதியத்தை நிறுத்தி வைப்பது திறமையற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு மறுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக மான்விழி பணியாற்றி வந்தார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்; பணியில் இருந்து ஓய்வு பெறவும் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது கூடுதல் மாவட்ட நீதிபதி மான்விழியை பணி நீக்கம் செய்ய நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பணி நீக்கம் மட்டும் அல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையை தொடரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கே.விஜயகுமார் 2015ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுக்களுக்கு இவர் அளித்த விளக்கத்தில் உயர் நீதிமன்றம் திருப்தி அடையவில்லை. ஏழு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. அதனால் இவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்த பொன்பிரகாஷ் 2017 மார்ச்சில் ஓய்வுபெறும் வயதை எட்டினார்; ஆனால் ஓய்வு பெற அனுமதிக்கவில்லை. முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவரை குற்றச்சாட்டுக்களின் கடுமை கருதி தற்போது பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய என்.ராஜலட்சுமி, டி.ஜெயஸ்ரீ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிசீலித்தது. இவர்களுக்கான ஊக்க ஊதியத்தை நிறுத்தி வைக்கவும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உயர் நீதிமன்றம் முடிவெடுத்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றிய நீதிபதி சாவித்ரி மீதான குற்றச்சாட்டுக்கு உயர் நீதிமன்றம் கண்டனத்தை மட்டும் பதிவு செய்தது. ஏற்கனவே இவருக்கு ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டிருந்தது.

மாவட்ட நீதிபதிகள் 55 – 58 வயதுக்கு வரும் போது அவர்களின் திறமையை உயர் நீதிமன்றம் பரிசீலித்து இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்குவது உண்டு. அதாவது ஓய்வுபெறும் வயது 58 என்றாலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி 60 வயது வரை பணியாற்ற அனுமதி வழங்கும்.

தற்போது மாவட்ட கூடுதல் நீதிபதிகளாக உள்ள திருநாவுக்கரசு, கே.மணி, எம்.கோமதிநாயகம், எஸ்.கணேசன், தனேந்திரன், மீனா, சதீஷ், தேவநாதன், பிச்சம்மாள் ஆகியோருக்கு பணி நீட்டிப்பு வழங்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு மறுத்துள்ளது. ஆனால் 17 நீதிபதிகளுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Punithan T A