பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதவி விலகி உள்ள நிலையில், அவரை கைது செய்து உரிய விசாரணை நடத்தக்கோரி கரூர் எம்.பி. ஜோதிமணி தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் மதன். இவர் மதன் டைரி என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்திவருகிறார். இந்தச் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர்.

15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி.ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்” எனக் கூறி வீடியோவை வெளியிட்டார்.

தமிழக பாஜகவின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராகவும், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பாஜகவின் கருத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பவராகவும் செயல்பட்டு வந்த கே.டி ராகவன், அக்கட்சியில் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கே.டி ராகவன் குறித்து ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.டி ராகவன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, கே.டி ராகவனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ஜோதிமணி, “பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பில் இருந்த கே.டி.ராகவன் குறித்து ஆபாச வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கே.டி.ராகவனை முறையாக கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று பாஜக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. இவைகளை கண்டிக்காமல் பாஜக தலைவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மூலம் பாஜகவினரால் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது வெளிவருகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதேநிலை தொடர்கதையாகி வருகிறது. இந்த அரசு பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை கொடுக்கும் என முதலமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையில் காவல்துறை இயக்குநரை சந்தித்து முறையாக புகார் அளித்துள்ளோம்.

பெண்களுக்கு தேவையான நியாயங்கள் இந்த ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கே.டி.ராகவன் உட்பட பாஜகவினரால் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பாஜகவில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது. எவ்வளவோ புகார்கள் வந்தும் இதுவரை பிரதமர் மோடி இதுபற்றி வாய்திறக்கவில்லை என்று ஜோதிமணி எம்பி கூறியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மகளிரணியினர் உடனிருந்தனர்.

மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து