இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவரான இல.கணேசன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இல.கணேசன், தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார்.

இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்.

பாஜக தொடங்கப்பட்டது முதல் கட்சி பணியில் ஈடுபட்டார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன் விரைவிலேயே மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ் தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன். பாஜக செயற்குழு உறுப்பினராக 31 ஆண்டுகளாக இருக்கும் கணேசன், தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர் பதவிகளிலும் இருந்தார்.

அதன் பிறகு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2009, 2014 பாராளுமன்ற தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவியை ஒரு ஆண்டு வகித்தார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், “வடகிழக்கு மாநில மக்களுக்கு சேவை செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறேன். இந்த வாய்ப்பை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி