பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக மயில்வேல் போட்டியிடுவார் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதேபோன்று, தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. 

அதிமுக சார்பில் 20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முருகன் போட்டியிட மாட்டார். அவருக்கு பதில் மயில்வேல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டஅறிக்கை:அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக எம்.மயில்வேல் (தேனி-அல்லி நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்) தேர்ந்தெடுக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முருகன் நீக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பெரியகுளம் வேட்பாளர் முருகன், தேனி மாவட்டம் டி.கள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் வசித்தார். 

இப்போது அவர் இங்கு இல்லை. சென்னையில் சமூக நல அலுவலராக இருக்கிறார். இப்படி தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத வேட்பாளரை அறிவித்ததற்கு கட்சி தலைமையிடம் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். 

மேலும், முருகனின் அப்பா மற்றும் அவரது தம்பி ஆகியோர் வேறு கட்சியை சேர்ந்தவர்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முருகனின் தந்தை முத்துவும் நண்பர்கள். அந்த அடிப்படையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் கடுமையாக எதிர்த்ததால், முதல்வரின் தலையீட்டின் பேரில் தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். 

2 நாட்களுக்கு முன் ஓபிஎஸ் தலைமையில் தேனியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் முருகன் பங்கேற்கவில்லை. அவரது படமும் வைக்கப்படவில்லை. கட்சி தலைமையின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றனர்.

ஆனால், டி.கள்ளிப்பட்டி பகுதி மக்கள் கூறும்போது, “கடந்த 2016ம் ஆண்டும் எங்கள் ஊரை சேர்ந்த இளமுருகன் என்ற நபரை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தார். 

பின்னர் 2 நாளில், அவரை மாற்றிவிட்டு கதிர்காமு வேட்பாளர் என்று அறிவித்து விட்டார். அவர் வெற்றிபெற்று டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றுவிட்டதால்தான் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது. 

இப்போதும், டி.கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகனுக்கு சீட் கொடுத்துவிட்டு, 4 நாளில் அவரது சீட்டை பிடுங்கி விட்டனர். இப்படி தொடர்ந்து டி.கள்ளிப்பட்டி பகுதி மக்களை ஓபிஎஸ் குடும்பத்தினர் பழிவாங்குகிறார்கள். 

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது, எங்கள் பகுதியை சேர்ந்த பூசாரி நாகமுத்து என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு உள்ளது. இதற்காக எங்கள் ஊரை அவர்கள் பழிவாங்குகிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. இதற்கு தேர்தலில் வாக்குச்சீட்டு மூலம் பதில் அளிப்போம்” என்று கூறினர்.

தினகரனும் பேட்டியில் ஒரு வேட்பளாரை கூட ஒழுங்க அறிவிக்க இயலாத நிலையில் இருக்கும் அதிமுகவை கிண்டல் அடித்து பேசியது பரபரப்பை எற்படுத்தி உள்ளது