பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாகப் பதிவிட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஏப்ரல் 2018 இல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள் இடையே பேசு பொருளானது. ஆளுநரின் இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

மேலும் ஆளுநரின் செயலால் கோபமடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதற்கு வருத்தம் தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “பேத்தி போல கருதி கன்னத்தில் தட்டினேன்” என விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார்.

இதற்கிடையே, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பாஜக செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதளத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டதால், எஸ்.வி.சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தன. மேலும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,

ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கி எஸ்.வி.சேகர் மன்னிப்பும் கேட்டுள்ளார். நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி.சேகர் தயாராக உள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், இதுதொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.