உலக அளவில் அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் 94-வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய பசி மதிப்பீடு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் உலகளாவிய பசி மதிப்பீடு என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.

குழந்தைகளுக்குத் தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா என்றும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதிற்கு ஏற்ப எடை மற்றும் உயரம் கொண்டிருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்து, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றை வைத்தும் இந்த பட்டினி குறீயிடு கணக்கிடப்படும்.

அதன்படி, 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்தியா 94வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் அதிகம் பசியால் வாடும் மக்கள் கொண்ட நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் 61 வது இடத்திலும், இலங்கை 64வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 69 வது இடத்திலும், இந்தோனேஷியா 70 வது இடத்திலும், நேபாளம் 73 வது இடத்திலும், வங்கதேசம் 75வது இடத்திலும், மியான்மர் 78 வது இடத்திலும், பாகிஸ்தான் 88வது இடத்திலும் உள்ளது.

பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைவிடப் பின்தங்கிய நிலையில் உள்ளது இந்தியா. உலக அளவில் பசியால் மோசமான நிலையில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதில் ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, எத்தியோப்பியா, அங்கோலா, கென்யா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு 117 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 102வது இடத்தில் இருந்தது.

முன்னதாக இந்திய அரசு மிகவும் ஏழை, எளிய மக்களின் உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்