அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதால் இன்று (12.3.2022) காலை விடுதலை செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மகேஷ் என்பவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை துரைப்பாக்கதில் தனக்கு சொந்தமான 8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டுள்ளனர் என்றும் இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும் எனவும் தெரித்துள்ளார்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் ஆகியோர் மீது குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், கொடுங்காயத்தை ஏற்படுத்துதல், கொள்ளையடித்தல், கொலை மிரட்டல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று (11.3.2022) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, “திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்” என்று நிபந்தனை விதித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கினார்.

முதல் இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதால், சிறை நிர்வாக நடைமுறைகள் முடிந்து காலை 6.45 மணி அளவில் ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார்.