புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முதல்-மந்திரி நாராயணசாமி தலைமையில் காங். மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
 
புதுவையில் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா அறிவித்தார்.
 
அவரது அறிவிப்பு கடந்த 11–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவினால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
 
இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்-மந்திரி நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். துணைநிலை கவர்னரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு காங். மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
 
ஆளுநர் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி எம்.எல்.ஏக்களுடன் முதல்-மந்திரி நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்தும், அமைச்சர்கள் கழுத்தில் கருப்பு துண்டு அணிந்தும் வந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
 
நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு கிரண்பெடி ஒப்புதல் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என நாராயணசாமி கூறியுள்ளார். இதனால் கவர்னர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.