இந்திய மருத்துவ சங்கம், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியான மருத்துவர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 43 மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவர்கள் இறந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த புள்ளி விவரத்தைத் இந்திய மருத்துவ சங்க தமிழக தலைமை மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் சிஎன். ராஜா கூறுகையில், “தமிழகத்தில் கொரோனாவுக்கு 2 அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட 22 மருத்துவர்கள் மட்டுமே இறந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலியாகியதாக அகில இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள தகவல் தவறானது” என்றும் சிஎன். ராஜா கூறியுள்ளார். இருப்பினும் கொரோனாவிற்கு பலியான மருத்துவர்கள் எண்ணிக்கை குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் நீடித்து வந்தது.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படுவதை இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் மறுத்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக @IMAIndiaOrg தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று!” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க: செவிலியருக்கு நேர்ந்த அவலம்… கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்…