தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, இன்று (8.2.2021) 3வது முறையாக நீட் விலக்கு மசோதா மீதான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்பி பிஎஸ்) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையை கூட்டி நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது.

அதை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று ஆளுநர் கருத்து தெரிவித்து, 142 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று (8.2.2022) தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை வாசித்தார்.

அக்கடிதத்தில், நீட் தேர்வு முறையானது. உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை. காமாலை கண்ணால் பார்ப்பது போன்று ஒரு தலைபட்சமான முறையில் குழுவின் அறிக்கை உள்ளது. உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சிறப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

“தமிழ்நாடு சட்டப்பேரவையின் இறையாண்மையை, உரிமையைக் காப்பதற்காகவும் நாம் இன்று கூடியிருக்கிறோம். கூட்டாட்சி தத்துவம் காப்பற்றப்படுவதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம். நான் 16 வயதில் அரசியல் களத்தில் நுழைந்தேன். என்னுடைய பொது வாழ்கையில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 % உள்இடஒதுக்கீடு உள்ளிட்ட இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் 118 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாடு தான் முதலில் வழக்குப் போட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு முன் மொழியப்பட்டபோதே, தலைவர் கலைஞர் கருணாநிதி அதனைக் கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வு முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானது தான். ஏழை, எளிய மாணவர்களின் கனவுக்கு ஒரு தடுப்புச் சுவர். நீ மருத்துவராக வேண்டாம் என்று ஒருசிலரை மட்டும் நீட் தேர்வு தடுக்கிறது.

பயிற்சி மையங்களில் சேர்ந்து மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்குத்தான் இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வளவு பணம் கொடுத்து பயிற்சி பெற முடியாதவர்கள் உள்ளார்கள். அவர்களுக்குத்தான் நாம் நீட் விலக்கு கேட்கிறோம்.

நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுவந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக்கார நீதியை பேசுகிறது;

அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது. அரசியலமைப்புச் சட்டம் கூறக்கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு. அதனை எதிர்த்து நிறைவேற்றப்ப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்மூலம் சட்டப்பேரவையின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது.

சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்திவைக்க முடியுமென்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன? நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் மசோதாவை மதிக்காமல் திருப்பி அனுப்பியது மக்களாட்சிக்கு எதிரானது. ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும்.

நீட் தேர்வால் முறைகேடுகள்தான் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 4 பேரும், 2020 ஆம் ஆண்டு 5 பேரும் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசே கூறியுள்ளது. இது தொடர்பாக தற்போது வரை 12 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைக்கும் அனுப்பியுள்ளது நீட் தேர்வு. இது தேர்வல்ல மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்விற்கு எதிரான கருத்துக்களை குறிப்பிட்டார்.

முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதா மீது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் தங்களின் கருத்தை முன்வைத்துப் பேசினர். இதனிடையே நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வரின் உரைக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.