ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, காவித் துண்டுகள் அணிந்து ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் வலம் வரும் மாணவர்களுக்கு பதிலடியாகவும், முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாகவும் நீலத் துண்டு அணிந்து ஜெய் பீம் கோஷத்துடன் சில மாணவர்கள் வலம் வந்தனர்.

அத்துடன், புர்கா அணிந்து வந்த மாணவி ஒருவரைச் சுற்றி, காவித் துண்டு அணிந்த மாணவர் கூட்டம் ஒன்று ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மேலும், ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக் கொடி இருக்கும் இடத்தில் காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனால், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே பாஜக அரசு ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்களிடையே மத வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு மதக் கலவரங்களை நிகழ்த்த வழிவகை செய்வதாக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.