கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் நாடுகளின் பாதிப்பு வரைபடத்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு வெளியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி அடைந்துவிட்டது என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் 2.37 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6600ஐ தொட்டுவிட்டது. கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு மூலம் மற்ற நாடுகள் எவ்வாறு சமாளித்தன, ஊரடங்கை எவ்வாறு அமல்படுத்தின என்பது குறித்த வரைபடத்தை ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய 4 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தினார்கள் என்பதையும், இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, ஊரடங்கை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த வரைபடம் மூலம் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்வி்ட்டர் பதிவில், “தோல்வியடைந்த ஊரடங்கு இப்படித்தான் இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. வைரசை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்? திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்? என்பதை பாஜக அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க: கைவிட்ட சுயசார்பு இந்தியா திட்டம்… தனது கடைசி தொழிற்சாலையையும் மூடிய அட்லஸ்

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தங்களுக்கு அரசிடம் இருந்து நேரடியாக நிதித்தொகுப்பு தேவை என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் குரல்கள், கேட்காத காதுகளில் சொல்லப்படுகின்றன. உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து எப்போது அரசு விழிக்கப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப, மத்திய அரசு வெறும் முழக்கங்களை எழுப்பி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.