வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7 ஆம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததால், ஜனவரி 8ல் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 40வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. 6வது சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

ஆனால், 50% பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என மத்திய அரசு கூறுவது தவறான தகவல் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன. மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் விவசாயிகள் உறுதி கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்று வரை உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், விவசாய சங்கங்கள், மத்திய அரசு இடையே 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் விக்யான் பவன் அரங்கில் இன்று மதியம் தொடங்கியது. இதில் மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆகியோரும், போராட்டம் நடத்தும் விவசாயிகள் சார்பில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால், வேளாண் சட்டங்களில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவர தயாராக உள்ளதாகவும் சட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் எந்த வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான, 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 8 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா காவல்துறை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு