இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நாள் ஜுன் 6.

ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது மற்ற மொழிகளை சாராததாக இருக்க வேண்டும். தனித்து இயங்கும் ஆற்றல் அந்த மொழிகளுக்கு இருக்க வேண்டும்.

செம்மொழி எனும் தரத்தை வழங்கும் குழுவினர் மூன்று விதமான வரையறைகளை வகுத்துள்ளனர். 1,550 முதல் 2,000ஆண்டுகள் வரையிலான தொன்மையான நூல்களைப் பெற்றிருத்தல் வேண்டும், அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள் இருத்தல் வேண்டும். அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக் குடும்பத்திடமிருந்து கடன் பெறாததுமாக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் 2004ம் ஆண்டு ஜூன் 6 அன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் தான்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

உயர்தனிச் செம்மொழி என்ற புதுவகை மொழிகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு 12.10.2004 அன்று அரசிதழில் அரசாணை பிறப்பித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்புக்குரியது தமிழ் மொழி. தமிழ்மொழியின் தொன்மையை ஏனைய உலக மொழிகளோடு ஒப்பிட்டு நோக்கினால், அதன் அருமையும், பெருமையும் மேலும் உயர்வதை அனைவரும் உணரமுடியும்.

இன்று உலக மொழியாக திகழும், ஆங்கில மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. அறிவியல் மொழியாகிய ஜெர்மன் மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. பிரெஞ்சு மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 9-ம் நூற்றாண்டில் தான் கிடைத்தது. ரஷ்ய மொழியின் பழமையான எழுத்து வடிவம் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லத்தீன் மொழியில் இருந்து உருவான இத்தாலிய மொழி 10-ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது.

ஆனால் கிறித்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகட்கு முன்பே முதல் எழுத்து ஆவணமாக, தொல்காப்பியம் நூலை பெற்று, இலக்கண வரம்பு கொண்டு வாழ்ந்த தமிழ்மொழி இன்றும் சாமானியர் முதல் ஆன்றோர், சான்றோர் வரை வாழும் மொழியாகவும், வளரும் மொழியாகவும், வரலாற்று மொழியாகவும் திகழ்கிறது தமிழ்மொழி.

கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். கிழக்கே சீனா முதலிய பல நாடுகளுடனும் ஜாவா, சுமத்ரா, மலேயா உள்ளிட்ட தீவுகளுடனும் தமிழ்நாடு வாணிகம் காரணமாக தொடர்பு கொண்டிருந்தது.

தமிழ்ச் சமுதாயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் முத்திரைக் குறியீடாக இலங்குவது தமிழ்மொழி, தொன்மையால் இலக்கண இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் நெறிகளால், நீதி நிர்வாக, அறநெறி வழிகளால், இன்னபிறவற்றால், மிக உயர்ந்த மாண்புகளைக் கொண்டுள்ளது செம்மொழியாகிய தமிழ்மொழி.

2000 ஆண்டுகள் பழமையானது மட்டுமல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து வருகிறது தமிழ் மொழி. உலக அளவில் போட்டிபோடக்கூடிய இலக்கியங்கள் இன்றும் தமிழில் வெளியாகிவருகிறது.

சமஸ்கிருத கலப்பு, இந்தி ஆதிக்கம், ஆங்கில மோகம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தொடர்ந்து இளமைத் துடிப்புடன் இயங்கிவருகிறது தமிழ் மொழி.

தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழி உள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழ் மொழி அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது. கல்வெட்டிலிருந்து கணினி வரை தொடரும் இதன் பயணம் காலம் உள்ளவரை நீளும் என்பதே தமிழ்மொழியின் தனிச் சிறப்பாகும்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை பெருமைபடுத்தும் வகையில் கோவையில் 2010 ஆம் ஆண்டு ஜூன் 23- 27ம் தேதி வரை 5 நாட்கள் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மறைந்த முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.